Top Social Icons

II இராஜாக்கள் 18 அதிகாரம்

II இராஜாக்கள்
18 அதிகாரம்

    1. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.

    2. அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.

    3. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

    4. அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.

    5. அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.

    6. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

    7. ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

    8. அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.

    9. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.

    10. மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.

    11. அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.

    12. அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.

    13. யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.

    14. அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.

    15. ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.

    16. அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.

    17. ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

    18. ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

    19. ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

    20. யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும் படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?

    21. இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

    22. நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

    23. நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள் மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

    24. கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?

    25. இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.

    26. அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

    27. அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

    28. ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

    29. எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.

    30. கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரைநம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

    31. எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,

    32. அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.

    33. ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

    34. ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

    35. கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.

    36. ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

    37. அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...