Top Social Icons

மேய்ப்பனின் சத்தம் கேட்கும் ஆடு




கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,...கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

• (எபேசியர் 5:25-27).

ஒரு போதகர் ஒரு புதிய சபையை ஆரம்பித்து,  தன் முழு நேரத்தையும் அதற்கென்று செலவழித்து,  ஆத்தமாக்களுக்காக கர்த்தரிடம் போராடி ஜெபித்து, தன் ஊழியத்தை உத்தமமாக நிறைவேற்றி வந்தார். அவருடைய சபையில்,  ஆத்துமாக்கள் வர ஆரம்பித்தனர். அவரும் உற்சாகமாக தன் ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். அவர் அந்த ஆத்துமாக்களை நேசித்தார். அந்த சபையில் வந்த ஒரு குடும்பம்,  மற்ற சபையின் அங்கத்தினரோடு இருந்த பிரச்சனையின் காரணமாக சபைக்கு வருவதை நிறுத்தினர். போதகர் அக்கறையோடு ஒரு வாரம் அந்த குடும்பத்தினர் வரவில்லை என்றதும் அவர்கள் வீட்டிற்கு சென்று,  ‘என்ன ஐயா நீங்கள் சபைக்கு வரவில்லை?’  என்று கேட்டபோது,  அவர்கள், ‘ஒன்றும் இல்லை பாஸ்டர்’  என்று மேலாக சொல்லி மழுப்பினார்கள். அடுத்த வாரம் அவர்கள் வருவார்கள் என்று போதகர் எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் வரவேயில்லை. வேறு சபைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதை கேள்விப்பட்ட போதகருக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. ‘இந்த குடும்பத்திற்காக நான் உம் சமுகத்தில் எத்தனை நாள் ஜெபித்திருக்கிறேன், ஆனால் சிறு காரணம் வைத்து அவர்கள் சபைக்கு வரவில்லையே’  என்று தேவனிடம் அந்த போதகர் அழுது ஜெபித்தார். கர்த்தர் அவரிடம்,  ‘அவர்களுக்கு சபையை குறித்த தரிசனமும், சபை என்பது என்ன என்பதைக் குறித்த வெளிப்பாடும் இல்லை, அதனால் கவலைப்படாதே’  என்று அவரை தேற்றினார்.


இந்நாட்களில்,  அநேகர்,  சபையில் தங்களுக்கு ஒரு பதவி கொடுக்கப்பட வேண்டும்,  இல்லாவிட்டால் என்ன,  வேறு சபை இருக்கிறது என்று,  உதறி தள்ளிவிட்டு போகிறவர்கள் உண்டு.  சில வேளைகளில்,  போதகர் சற்று கடிந்து கொண்டு பிரசங்கித்தால், இவர் யார் எங்களை கடிந்து கொள்ள?  என்ற எண்ணம் சிலருக்கு வருவதுண்டு. யாரும் தங்களை கடிந்து கொள்ள கூடாது,  சபைக்கு தான் வருவதே பெரிய கனம்,  அதில் என்னை கடிந்து கொள்வதா? என்கிற எண்ணம் வருவதுண்டு. காரணம்  பணம்,  பணம் அதிகமாக அதிகமாக, தான் பெரியவன் என்ற எண்ணம் தன்னாலே வருவதுண்டு. மற்றவர்கள் யாராயிருந்தாலும்,  சரி,  அது போதகராயிருந்தாலும் யாரும் தான் செய்யும் தவறுகளை,  சுட்டி காட்டக்கூடாது என்கிற அகந்தை மனதில் வருவதினால் அநேகர் பிரிந்து போகிறார்கள்.


சிலருக்கு வசனத்தில் இரண்டு வார்த்தைகள் தெரிந்து விட்டால் போதும்,  தான் ஒரு பெரிய போதகர் என்கிற நினைப்பு வருவதினால் தனக்கு பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு,  தனியாக ஒரு சபையை ஆரம்பித்து நடத்துகிறார்கள். ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்.’ (யோவான் 10:1-3) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆடுகளின் மேய்ப்பனாகிய போதகர், தன் ஆடுகளை அறிந்திருக்கிறபடியால், அவர் பேர் சொல்லிக் கூப்பிட்டு அவர்களுக்காக கரிசனை உள்ளவராயிருக்கிறார். தேவனிடம் தினமும் அவர்களுக்காக பரிந்து பேசி,  அவர்களுடைய தேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் திறப்பின் வாசலில் இருந்து போராடி ஜெபித்து தேவனிடத்திலிருந்த ஆசீர்வாதங்களை பெற்று தருகிறார். ஆனால் அதை அறியாத ஆடுகளோ, எல்லாவற்றையும் துச்சமாக எண்ணி, ஒரு சபையை விட்டு வேறு சபைக்கு தாவுகிறார்கள். இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் என்று யாக்கோபு 1:8 ல் பார்க்கிறோம். ஒரு சபையை விட்டு வேறு சபைக்கு தாவினவர்கள், அங்கும் ஏதாவது தவறு நேர்ந்தால், அதைவிட்டு வேறு சபைக்கு தாவுவதற்கு தயங்க மாட்டார்கள்.


'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி,  தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. (2 தீமோத்தேயு 4: 3-5) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. சபையானது கிறிஸ்து தமது சுய இரத்தத்தால் சம்பாதித்தது. கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,..கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.


மற்றும், அவர் நம்மை நேசித்தபடியினால் ‘உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்’ - (எரேமியா 3:15) என்று அருமையான மேய்ப்பர்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அவர்கள் ஒரு ஆத்துமாவை கர்த்தரிடம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக எத்தனை பாடுகளை அனுபவித்திருப்பார்கள் என்பது அவர்களை போல ஆத்தும பாரம் கொண்ட வேறு போதகருக்குத்தான் தெரியுமே தவிர ஆடுகளுக்கு தெரியாது. ‘உங்களை நடத்துகிறவர்கள்,  உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.’- (எபிரேயர் 13:17) என்று பவுல் அப்போஸ்தலன் போதகர்களை நம் ஆத்துமாக்களுக்கு உத்திரவாதம் பண்ணகிறவர்கள் என்று குறிப்பிடுகிறார், ஆகையால், தேவன் நமக்கு என்று அவருடைய சித்தத்தினபடி கொடுத்திருக்கிற சபையில், பதவி உண்டோ இல்லையோ,  நமக்கு கொடுத்திருக்கிற போதகர்களை கனம்பண்ணி,  ஒரே சபையில் நிலைத்திருப்போம். ஒரே சபையில் இருக்கும்போது நமக்காக போராடி ஜெபிக்க சபையின் ஆத்துமாக்கள் உண்டு,  சபையாய் குடும்பமாய் கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய தேவன் தாலந்துகளை தருவார்.


மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை (எபிரேயர் 5:4). அப்படி தேவனால் ஏற்படுத்தப்பட்ட போதகர்களை, கர்த்தருடைய சமுகத்தில் நம் நிமித்தம் அவர்கள் கண்ணீர் விட காரணமாய் நாம் இருக்கக்கூடாது. அது நமது குடும்ப ஆசீர்வாதத்திற்கு தடையை கொண்டு வரும். தலையாகிய கிறிஸ்துவுக்குள் சரீரமாகிய கர்த்தருடைய சபையில் நிலைத்திருந்து கனி கொடுத்து, அவருக்கென்று சாட்சியாக வாழ்வோம். போதகர்கள் உள்ளம் நிறைந்து நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசீர்வாதம் நம் மேலும் நம் பிள்ளைகள் மேலும் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் இருக்கும். தேவனுடைய ஆலயத்தின் நன்மையால் தேவன் நம்மை நிரப்புவார். ஆமென் அல்லேலூயா!
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...