Top Social Icons

உறுதியான அஸ்திபாரம்


தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது.

• (2 தீமோத்தேயு 2:19).

ஐரோப்பா தேசமொன்றிலே மிகப்பெரிய கட்டிடம் ஒன்று நவ நாகரீகமான முறையில் கட்டப்பட்டு வெகு நேர்த்தியாக காணப்பட்டடது. ஆனால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் அரசாங்கத்தினால் முத்திரை போடப்பட்டிருந்தது. காரணமென்னமென்றால் அவ்வீட்டைக் கட்டி எழுப்ப ஆரம்பிக்கும்போது ஒருவர் வாங்கின லஞ்சத்தின் விளைவாக மிகவும் மோசமாக அஸ்திபாரம் போட்டு விட்டார்கள். அஸ்திபாரம் உறுதியானதா என்று கவனிக்காத எஞ்ஜினியர்கள் அதின் மேல் மிக வேகமாக கட்டிடத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே கட்டிடம் ஆட்டம் கண்டது. இதற்கான காரணம் அதை பொறுப்பெடுத்து செய்தவர்களுக்கு உத்தம குணமில்லை. தங்களது உண்மைத் தன்மையை லஞ்சத்திற்கு விற்றுவிட்டார்கள். எவ்வளவு பணம் செலவழித்து என்ன பயன்? எல்லாம் வீணானது.


அதேப் போல சரியான குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கு சரியான அஸ்திபாரம் தேவை. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் அஸ்திபாரம் கொலோசேயர் 3:18-20 வரை உள்ள வசனங்களில் அடங்கியுள்ளது. அவைகள் கணவன் மனைவியிடம் அன்புகூறுவதும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவதும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதும் மற்றும் பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாதிருப்பதும் ஆகும்.


குடும்பத் தலைவன் தேவையில்லாத காரியத்திற்கு அதிகமாய் கோப்படுவது, ஆணவமாய் நடந்துக் கொள்வது, அளவுக்கதிகமாய் அதிகாரம் செலுத்துவது போன்றவை குடும்பக் கட்டுமானத்தை கெடுக்கும். பணத்தை குடியிலும், வெறியிலும், புகைப்பதிலும், சீட்டாட்டத்திலும், தேவையற்ற நண்பர்களை சேர்த்துக் கொண்டு செலவழிப்பதிலும் இருந்தால் அந்தக் குடும்பம் எப்படி முன்னுக்கு வர முடியும்? கணவன் மற்ற பெண்களிடத்தில் அல்ல, மனைவியினிடத்தில் அன்புகூரும்படியாக வேதம் நமக்கு போதிக்கிறது.


அதுப்போல மனைவி குடும்பத்தின் அதிகாரி போல நடக்கிற வீடுகள் உண்டு. குறிப்பாக கணவனை விட கூடுதல் சம்பளம் வாங்கும்போது அப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம். வேதத்தின்படி கணவனே குடும்பத்தின் தலையாக இருக்க வேண்டும். கணவனுக்கு கீழ்ப்படிந்தவளாக மனைவி காணப்பட வேண்டும். நான் வைத்ததுதான் சட்டம் என்றும், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் அறிமுகமில்லாத ஆண்களோடு மணிக்கணக்கில் பேசுவதும் குடும்ப உறவை முறிக்கிற காரியங்கள். கணவனுக்கு விருப்பமில்லாத காரியங்களில் மனைவி ஒருபோதும் ஈடுபடக்கூடாது. இல்லாத பட்சத்தில் குடும்பத்தின் அஸ்திபாரம் ஆட்டம் காணும்.


அதைப் போல பிள்ளைகளை கீழ்ப்படிய சிறுவயது முதல் பயிற்றுவிக்க வேண்டும். தேவையானால் வசனத்தின்படி பிரம்பையும் பயன்படுத்தக்கூடிய உறுதி பெற்றோருக்கு தேவை. மற்றவாகள் பிள்ளைகளை குறித்து குறைகளை சொல்லும்போது,  என் பிள்ளை அப்படித்தான் இருப்பான், உன் பிள்ளைகளை நீ பார்த்துக் கொள் என்கிற அநாவசியமான வார்த்தைகளை கொட்டக்கூடாது. அந்த தவறு பிள்ளையிடம் இருக்கிறதா என்றுப் பார்த்து அதை திருத்த முயற்சிக்க வேண்டும். ஏதோ நம் பிள்ளைகள் வானத்தில் இருந்து வந்த தேவதூதர்களை போல நினைத்து அவர்களை சத்தம் போடவே பயப்படுகிற பெற்றோர் இருக்கிற வரை பிள்ளைகள் கெட்டுப் போக சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. பிள்ளைகளை கண்டிக்கிற அதே நேரத்தில் அன்பும் செலுத்த வேண்டும்.


பிரியமானவர்களே, வேத வசனத்தின்படி அமைக்கப்படும் குடும்பம் உறுதியாக அஸ்திபாரம் போடப்பட்ட வீட்டைப் போன்றது. அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வரலாம். ஆனால் வீடோ அசையாது. கணவன், மனைவி, பிள்ளைகள் இவர்களுக்கு தேவன் கொடுக்கும் இந்த எளிய ஆலோசகைளை கைக்கொள்ளுவோம்.


வேத வசனத்தினால் அஸ்திபாரம் போடப்பட்ட, கிறிஸ்துவையே நம் குடும்பத்தின் அஸ்திபாரமாக வைத்துக் கட்டுவோம். அந்த வீடு அசையாததாக, உறுதியானதாக என்றென்றும் நிலைத்திருக்கிறதாக இருக்கும். ஆமென் அல்லேலூயா!


சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை


நான் விசுவாசிப்போர் இன்னாரென்றிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவு வரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே

••ஜெபம்•• 💫🙌🏻💫

எங்கள்அன்பின பரலோக தகப்பனே, மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று அவனுக்கு ஏற்றத்துணையை கொடுத்த நல்ல தெய்வமே உம்மை துதிக்கிறோம். இந்த நாட்களிலும் குடும்பங்கள் தேவையற்ற காரியங்களுக்காக தேவன் இணைத்ததை தாங்களாகவே பிரித்துக் கொண்டு தேவன் தங்கியிருக்கிற குடும்பங்களாக அல்ல, ஏதோ வாழ்கிறோம் என்று கணவனும் மனைவியும் ஒரு புறமும், பிள்ளைகள் ஒருபுறமுமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிற நிலைகளை மாறச் செய்யும். வேதத்தின்படி தங்களை திருத்திக் கொண்டு குடும்பமாக உமக்கென்று வாழ கற்றுத்தாரும். குடும்பத்தின் அஸ்திபாரமாக கர்த்தரையும், அவருடைய வசனத்தையும் வைத்து அதன் மேல் குடும்பத்தை கட்டி எழுப்ப சொல்லித்தாரும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...