Top Social Icons

கர்த்தரே மெய்யான தெய்வம்



ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள்.

• (1இராஜாக்கள் 18:39).

வாடச்மேன் நீ என்னும் அற்புத ஊழியரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் சீனாவில் ஆயிரக்கணக்கான வீட்டு சபைகளை நிறுவும்படி கடினமான பாதையில் ஊழியம் செய்தவர். ஒரு சமயம் மேஹ்வா என்னும் தீவில் கர்த்தருடைய ஊழியத்தை வைராக்கியமாய் செய்து வந்தார்.

அத்தீவின் கிராம மக்கள் ஜனவரி 11ம் தேதி தாங்கள் வழிபடும் கடவுளுக்கு பெரிய பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த கிராம மக்கள் மிகுந்த பெருமையுடன், 'கடந்த 286 வருடங்களாக இந்த பண்டிகை நாளில் மழை பெய்ததில்லை' என வாட்ச்மேனிடம் கூறினர். அப்போது அவருடன் வந்திருந்த சக ஊழியரான கியோசிங் லீ என்ற வாலிபன் சற்றும் தாமதியாமல், ' நான் உறுதியாகக் கூறுகிறேன், எங்கள் தேவனே உண்மையான தேவன். அவர் இந்த ஜனவரி 11ம் நாள் மழை வரச் செய்வார்' என சவால் விடுத்தார். அதற்கு அந்த தீவு மக்களும் 'அப்படி மழை பெய்தால் நாங்கள் அனைவரும் இயேசுவே தெய்வம் என்று ஏற்றுக் கொள்கிறோம்' என்றனர்.


கியோசிங் பேச்சைக் கேட்ட வாட்ச்மேன் நீ சற்றே திகைத்தார்.  'ஏன் தேவையில்லாமல் இப்படி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்' என மனதில் சற்று தடுமாற்றினாலும் மனதை தளரவிடாமல், தைரியத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தார். 'தகப்பனே, நாங்கள் எங்கள் எல்லையை மிஞ்சிவிட்டோமோ என்று எண்ணுகிறோம். ஆனாலும் உம்முடைய நாமத்திற்கு நீரே மகிமையை வரப்பண்ணும்' என குழுவாக கூடி ஜெபித்தனர்.


ஜனவரி 11ம் தேதியும் வந்தது. காலை தொடங்கி மதியம் வரை நல்ல மழை பெய்தது. கிராமத் தலைவரும் கிராம மக்களும் ஊழியர்களிடம் வந்து, 'பண்டிகை நாளை தவறாக மாற்றி சொல்லி விட்டோம். எங்களுக்கு பண்டிகை நாள் ஜனவரி 14ம் தேதிதான். அன்று மழை பெய்தால் பார்க்கலாம்' என்று கூறினர்.


மீண்டும் தொடர்ச்சியாக வாட்ச்மேன் நீயும் மற்றவர்களும் ஊக்கமாக ஜெபித்தார்கள். ஜனவரி 14ம்தேதியும் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனைக் கண்ட அந்த கிராமமே மனமாற்றமடைந்து கர்த்தரே தெய்வம் என்று ஏற்றுக் கொண்டது. பின்பு அங்கு ஒரு திருச்சபையும் நிறுவப்பட்டது.


இதேப் போன்று ஒரு நாள் எலியா தீர்க்கதரிசி கர்த்தரை விட்டு பினவாங்கிப் போய்,  பாகால்களை வணங்கின இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகவும் கர்த்தரே தேவன் என்று முழக்கமிட்டு, 'நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன், அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்'  (24ம் வசனம்).


அதன்படியே  'தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலி;ன் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்' (26ம் வசனம்). பதில் கொடுக்காத, கொடுக்க முடியாத தேவர்களை பார்த்து நாள் முழுவதும் கூப்பிட்டும் அவர்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.


'அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்' (36-37 வசனங்கள்) என்று எலியா தீர்க்கதரிசி சுருக்கமான ஆனால் கருத்துள்ள ஒரு ஜெபத்தை செய்தபோது, 'அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள் (38-39வசனங்கள்)அல்லேலூயா!


பிரியமானவர்களே, நாம் மறுபடியும் நம் தேவனே உண்மையான தெய்வம் என்று நிரூபிக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறோம். எலியாவின் தேவன் எங்கே என்று கேட்டு, விசுவாசத்தில் விரக்தி அடைந்தவர்களாக இந்த நாட்களில், அற்புதம் எங்கே நடைபெற போகிறது என்று அலுத்துப் போனவர்கள் உண்டு. அற்புதம் செய்யும் கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார் ஆனால் நாம் ஒரு எலியாவைப்போல ஒரு வாட்ச்மேன் நீயைப்போல எழும்பினால் நம்மைக் கொண்டு தாம் ஒருவரே உண்மையுள்ள தேவன் என்று நிரூபிக்க கர்த்தரும் காத்திருக்கிறார்.


ஆனால் நாம் எலியாவைப் போலவும் வாட்ச்மேன் நீயைப் போல கருத்துள்ள ஜெபத்தையும், விசுவாசத்தையும் உடையவர்களாக மாறாவிட்டால் இப்போதிருக்கிற சூழ்நிலையில் நாம் விழுந்துப் போவோம்.


கர்த்தருடைய வார்த்தையையும், அவரே உண்மையான தெய்வம் என்பதையும் நாம் ஆணித்தரமாக அறியாதிருந்தால், விசுவாசியாதிருந்தால், பணத்தைக் கொடுத்து மதத்தை மாற்றும் கூட்டத்திற்கு ஒருவேளை இணங்கிப் போய் விட நேரிடும். ஆனால் வைராக்கியமாக எங்கள் தேவனே தேவன் என்று நிரூபிக்கிறவர்களாக, கர்த்தருக்காக நிற்கிறவர்களாக மற்றவர்களுக்கு சவால் விடுகிறவர்களாக நாம் மாறினால் மதத்தை மாற்றுகிறவர்களும் மனம் மாறி, கர்த்தரை ஏற்றுக் கொள்வார்கள். அவரே தெய்வம் என்று அறிவார்கள். விசுவாசத்தில் உறுதிப்படுவோமா? கர்த்தரே தேவன் என்று அறிக்கை செய்து அவருக்காக வாழ்வோமா? அவரே உண்மையான தெய்வம்! ஆமென் அல்லேலூயா!
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...